
பொத்துவில் முகுது மஹாவிஹாரயில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய PARL அறிக்கை
Published
பொத்துவில் முகுது மஹாவிஹாரயில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய PARL அறிக்கை: காணி கொள்ளல் சட்டத்தின் தவறான பிரயோகமும் இராணுவமும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் முகுது மஹாவிஹார பிரதேசத்தில் குடிமக்களின் காணி நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்து வருவது தொடர்பாகவும் இப்பிரதேசக் காணிகளை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எனக் கூறி அவற்றுக்கான வெளிப்படைத்தன்மை மிக்க செயல்விதிகளைப் பயன்படுத்தாமலும் தொல்லியல் முக்கியத்துவத்தினை நிரூபிப்பதற்கான அறிவியல் சான்றுகளைச் சமர்ப்பிக்காமலும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுடன் கலந்தாலோசிப்பு நடத்தாமலும் கையகப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் காணி உரிமைக்கான மக்களின் கூட்டமைப்பு (PARL) ஆழமான கரிசனை கொண்டுள்ளது. காணி தொடர்பாக எடுக்கப்படும் எவ்வித நடவடிக்கைகளும் அக்காணிகள் அப்பிரதேசத்தில் கொண்டுள்ள சிக்கல்வாய்ந்த வரலாற்றினைக் கருத்திற்கொள்ளவேண்டும். இப்பிரதேச மக்கள் தீர்க்கப்படாத பல குறைகளைக் கொண்டுள்ளனர். அவற்றிற்கு நுண்மைத்தன்மையுடனான அர்த்தபூர்வமான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
அண்மைக்கால மாற்றங்கள்
அண்மைய ஊடக அறிக்கை ஒன்றின் படி, நிலைமை பற்றிய அவதானிப்புக்களை மேற்கொள்வதற்காக பொத்துவில் மஹாவிஹாரவிற்கு மே மாதம் 14 ஆம் திகதி விஜயம் செய்யுமாறு உயர் மட்ட இராணுவ ஆளணியினருக்கு ஜனாதிபதி ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளமை தெரியவருகின்றது. தூதுக்குழுவில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகளும் பதில் பொலிஸ் மாஅதிபரும் இடம்பெற்றிருந்தனர். “நாட்டில் அண்மைக் காலங்களில் பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் பரந்த அளவில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அத்துமீறப்படுவது தொடர்பிலும் சேதமாக்கப்படுவது தொடர்பிலும்” பெரும்போக்கு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகளுக்கான பதில் நடவடிக்கையாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இவ்விஜயத்தினைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குணரத்ன முகுது மஹாவிஹாரயிலும் அதனைச் சுற்றியும் பாதுகாப்பினைப் பேணுவதற்கு கடற்படைத் துணைப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இராணுவத் தூதுக்குழு தீகவாபி பிரதேசத்திற்கும் நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்திற்கும் விஜயம் செய்தது என இந்த ஊடக அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
1971 ஆம் ஆண்டில் பேராசிரியர் செனரத் பரனவிதான (தொல்பொருள் திணைக்களத்தின் அப்போதைய ஆணையாளர்) பொத்துவில் முகுது மஹாவிஹார பிரதேசத்தின் 72 ஏக்கரை தொல்லியல் இடமாகச் சுற்றுநிருபம் மூலம் பிரகடனப்படுத்த முயற்சித்தார் என மற்றொரு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. “தீவிரவாதக் குழுக்கள்” இப்பிரதேச்தினுள் “அத்துமீறி” “தொல்பொருள் முக்கியத்துவமிக்க பொருட்களுக்குச்” சேதமேற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் இந்த ஊடக அறிக்கை கவனத்தினை ஈர்த்திருந்தது. இப்பின்புலத்துடன் இப்பிரதேசத்தின் 61 ஏக்கர் காணி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவேண்டும் எனக் காணி அமைச்சர் அண்மையில் அறிவுறுத்தியிருந்தமையினைச் செய்தி அறிக்கை இணைத்திருந்தது. பொத்துவில் முகுது மஹாவிஹாரயின் பிரதம மதகுரு சங்கைக்குரிய வரகாபொல இந்திரதிஸ்ச தேரர் 72 ஏக்கர்கள் “மீளக்கொள்ளப்படவேண்டும்” என வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அம்பாறையில் காணிப் பிரச்சினைகளின் சிக்கல்தன்மை
1961 ஆம் ஆண்டு வரை அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதியாகவே இருந்து வந்தது. அதன் பின்னர் அதன் அடையாளம் திகாமடுல்ல நாகரீகத்தின் முக்கியத்துவத்துடன் இணைக்கப்பட்டது. பல நூற்றாண்டு காலமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்துவரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமலே இது நிகழ்ந்தேறியுள்ளது. அம்பாறையில் காணிக் குடியேற்றமும் காணிகளைப் பறித்தலும் சுதந்திரத்திற்குப் பின்னரான நீண்டதும் கசப்பானதுமான வரலாற்றினைக் கொண்டுள்ளது. இது கல்லோயாக் குடியேற்றத் திட்டத்துடனும் 1956 ஆம் ஆண்டு வன்முறையுடனும் யுத்தம் மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான மாற்றங்களுடனும் சுனாமியுடனும் தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் குடிசனவியலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போது முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் கரையோரப் பிரதேசங்களில் செறிந்து வாழ்கின்ற அதேவேளை சிங்கள் மக்கள் உள்நிலப்பரப்புக்களில் பெருமளவிற்குச் செறிந்து வாழ்கின்றனர். நிர்வாக நிறுவனக் கட்டமைப்புக்களின் ஆக்கக்கூறு அதீதமான அளவிற்கு இனத்துவமாக்கப்பட்டள்ளது. அரசியல் அனுசரணையானது வளப் பகிர்வில் தாக்கம் செலுத்திவருவதுடன் இதுவும் விளைவாக இனத்துவமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசச் சமுதாயங்களுக்கு இடையில் காணப்படும் நம்பிக்கையினை வேரறுக்கும் பல முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. தீகவாபி ‘புனித நிலங்கள்’, பொத்துவில் காணி மற்றும் தொல்லியல் அடிப்படையிலான சொத்துப்பறிப்புக்கள், நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டம் ஆகியவை அம்பாறைப் பிரதேசத்தில் காணிப் பிணக்குகள் பாகுபாடுகள், பலப் பிரயோகம் மற்றும் இனத்துவம் வழியேயான பிரிவுகள் பற்றிய முறைப்பாடுகளினால் நிறைந்துள்ளமைக்கான தெளிவான உதாரணங்களாகும். பொத்துவில் முகுது மஹாவிஹார பிரதேசத்தினைச் சுற்றியுள்ள இடத்தின் எல்லை பிரிப்புத் தொடர்பில் வெளிப்படைத்தன்மையோ பொதுத் தொடர்பாடலோ இருக்கவில்லை என்பதுடன் இவ்விடயம் குறைகளினாலும் சொத்துப்பறிப்புக்களினாலும் நிறைந்துள்ளது.
PARLஇன் அவதானிப்புக்கள்
காணிகளை அரசு கொள்வதற்கு முன்னர் அல்லது ஆக்கிரமிக்க முன்னர் அப்பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைக்கும் நடைமுறையினை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையிட்டு Pயுசுடு கரிசனை கொண்டுள்ளது. இது பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கில் பரவலாக இடம்பெறுகின்ற ஒன்றாகும். தெளிவற்ற நியாயப்படுத்தல்கள் அல்லது அரைகுறை நியாயப்படுத்தல்களுடன் காணிகளைக் கொள்வதற்காக தொல்பொருள் திணைக்களத்தினையும் வனஜீவராசிகள் திணைக்களத்தினையும் வனத் திணைக்களத்தினையும் பயன்படுத்துகின்ற போக்கினை PARL ஆவணப்படுத்தியுள்ளது. தன்னிச்சையான இக்காணி கொள்ளல்கள் நீண்டு நிலைத்து வாழ்ந்த சமுதாயங்களின் சொத்துக்கள் பறிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளதுடன் இனத்துவச் சிறுபான்மையினரை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கும் காணிப் பிணக்குகளையும் உருவாக்கியுள்ளது. தேர்தல் வருடத்தின் போது இனத்துவமாக்கப்பட்ட உதவி மற்றும் பௌத்த மதத்தின் காவலன் எனும் பிம்பத்தினைப் பயன்படுத்தல் ஆகியவை கொண்டுள்ள அரசியல் பொருத்தப்பாடு கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் காணிப் போராட்டங்களை PARL தொடர்ந்து கோடிட்டுக் காட்டியுள்ளதுடன் இந்த அண்மைக்கால நடவடிக்கையினைப் பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் மத்தியிலான குறைகளை ஆழப்படுத்தும் சாத்தியத்தினைக் கொண்ட ஒன்றாகவே நோக்குகின்றது. இது இனத்துவம் என்பதைத் தாண்டி குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான மற்றும் உயிர்களுக்கான அச்சுறுத்தலை அதிகரித்து பாதுகாப்பின்மையும் அவநம்பிக்கையும் பதற்றங்களும் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும். இராணுவமயமாக்கப்பட்ட தலையீடு என்பது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற ஒன்றாகவும் பக்கச்சார்புமிக்க ஒன்றாகவுமே நோக்கப்படுகின்றது இது இப்பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீண்டகாலமாகக் கிடைக்காதிருக்கும் தீர்வினை அடைவதிலுள்ள சவால்களை அதிகரிக்கவே செய்யும்.
1. மேற்குறிப்பிட்ட அனைத்தையும் கருத்திற்கொண்டு பொத்துவில் பிரதேசத்தில் கடற்படைப் பிரிவினை நிறுவும் திட்டத்தினை உடனடியாக வாபஸ்பெற பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுறுத்துமாறு PARL ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. சிவில் நிர்வாக விடயத்தில் இராணுவம் தலையிடுவது இப்பிரச்சினையினை மேலும் கடினமானதாக்கி மக்களைத் துருவமயப்படுத்தும் என்றே நாம் அஞ்சுகின்றோம். இது தொடர்பிலான எவ்விதமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினையும் பொலிசாரின் மேற்பார்வையின் கீழ் இருக்கவேண்டும்.
2. உரிய சிவிலியன் தலைமையிலான செயன்முறை அமுல்படுத்தப்படும் வரையிலும் கிடைக்கக்கூடியதான சகல தகவல்களும் பகிரங்கப்படுத்தப்படுகின்றன, பாதிக்கப்பட்ட தரப்பினர் கலந்தாலோசிக்கப்படுகின்றனர் மற்றும் செவிமடுக்கப்படுகின்றனர், நீதியானதும் ஒப்புரவானதுமான தீர்வு எட்டப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தி பொத்துவில் முகுது மஹாவிஹாரயினைச் சுற்றியுள்ள காணியினைக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு காணி அமைச்சரிடம் PARL அழைப்பு விடுக்கின்றது.
3. அமுலிலுள்ள சட்டங்களும் செயல்விதிகளும் அச்சட்டங்களின் உண்மையான நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அமுல்படுத்தப்படுகின்றன என்பதையும் தொல்லியல் பாதுகாப்பிற்காக அல்லது வேறு நோக்கங்களுக்காகக் காணிகளை ஒதுக்குதலும் காணிகளைக் கொள்ளலும் வெளிப்படைத்தன்மையுடனும் தெளிவான நியாயப்படுத்தலுடனும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் சமுதாயங்களும் செயன்முறை முழுவதினூடும் கலந்தாலோசிக்கப்பட்டன என்பதையும் உறுதிப்படுத்துமாறு PARL காணி அமைச்சரைக் கோருகின்றது.
4. உண்மைகள் நிலைநாட்டப்பட்டுப் பரிசீலிக்கப்படும் வரையில் ஊடகம் உள்ளிட்ட சகல தரப்பினரும் வேண்டுமென்றே தூண்டிவிடுகின்ற சொற்பதங்களைத் தவிர்க்குமாறு PARL அழைப்பு விடுக்கின்றது. இச்சொற்பதங்களில் பின்வருவன உள்ளடங்குகின்றன: ‘அத்துமீறுவோர்’, ‘பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தல்’ மற்றும் ‘தீவிரவாதிகள்’. உண்மைகள் ஊடக தர்மத்தினை மதித்து பொறுப்புடன் வழங்கப்படவேண்டும். ஏற்கனவே பிளவுபட்டுள்ள சூழலில் மேலும் பிரிவுகளையும் பக்கச்சார்புகளையும் தூண்டக்கூடாது
5. இலங்கையின் சகல பிரதேசங்களிலும் சிவில் நிர்வாகத்தினை வலுப்படுத்துவதற்காகப் பணியாற்றுமாறு தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்திலுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களுக்கு PARL அழைப்பு விடுப்பதுடன் அதற்கான பூரண ஒத்துழைப்பினையும் வழங்குகின்றது. உண்மையான பன்மைவாதமிக்க ஜனநாயக இலங்கைக்கான எமது தொலைநோக்கில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் இராணுவமயமாக்கப்பட்ட அணுகுமுறையே இல்லை.