
நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் பற்றிய PARL இன் அறிக்கை
Published
PARL: கல் ஓயா பெருந்தோட்ட அதிகாரிகளால் விவசாயிகள் மற்றும் நில உரிமை ஆர்வலர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
2023 ஏப்ரல் 5 ஆம் திகதி சம்மாந்துறையில் உள்ள மொறவில் ஆறு பகுதியில் மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குனர் திரு. நிஹால் அஹமட், அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஆண்கள் உட்பட சுமார் இருபத்தைந்து நபர்களால் பல மணிநேரம் தாக்கப்படனர். இவ் சம்பவத்தினை காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி (PARL) வன்மையாகக் கண்டிக்கிறது. திரு. நிஹால் அஹமட் PARL இன் முதன்மை உறுப்பினராகவும், அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான கூட்டணியின் இணைப்பாளராகவும், இலங்கையின் ஏழைகளது நில உரிமைகள் உட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளராகவும் பல வருடங்கள் செயல்பட்டு வருகின்றார்.
PARL க்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 1960 ஆம் ஆண்டில், அம்பாறை மாவட்டத்தில் நெல் விவசாயிகள் பாரம்பரியமாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7250 ஏக்கர் நிலம் அப்போதைய அரசாங்கத்தால் கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்டது. அரச சீனி கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியின் பாரம்பரிய நெல் விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். கரும்பு பயிர்ச்செய்கைக்காக மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையின் கீழ் சிலருக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட மற்றும் விவசாயம் செய்வதற்கு நிலம் கிடைக்காத மற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை அல்லது அவர்களின் வாழ்வாதார இழப்புக்கு எந்த நிவாரணமும் அல்லது தீர்வும் வழங்கப்படவில்லை. அரசு எடுத்த மற்றொரு நடவடிக்கை, பாரம்பரிய நெல் விவசாயிகள் வெளியேற்றப்பட்ட நிலத்தில் மற்ற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை நிறுவியது. இந்த விவசாய சமூகங்களுக்கு இடையே பதற்ற நிலைமையை ஏற்படுத்தியது. 1997 மற்றும் 2007 க்கு இடையில் சீனி கூட்டுத்தாபனம் செயல்படுவதை நிறுத்தியது மற்றும் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதிகளில் நெல் பயிரிட்டனர் மற்றும் நெல் சாகுபடி அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது. 2007 ஆம் ஆண்டு முதல், அரசாங்க-தனியார் பங்காளியான கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நிலங்கள் நிர்வகிக்கப்பட்டன, இதில் அரசாங்கம் 51% பங்குகளைக் கொண்டுள்ளது. நில பயன்பாடு முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரும்பு இப்பகுதியில் பயிரிடுவதற்கு பொருத்தமற்ற பயிராக இருந்ததாகவும், பயிரிடலில் ஏற்பட்ட தோல்வியால் பல விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் நிர்க்கதியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட விவசாயிகளது பாரம்பரிய நில உரிமை இழப்பு மற்றும் கரும்புப் பயிர்ச்செய்கை தொடர்பாக அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலையீடு செய்து வருவதுடன் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில பலமுறை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி விவசாயிகள் இழந்த நிலம் தொடர்பான தகவல்களை சேகரிக்க நிஹால் அகமட், அம்பாறை மாவட்டத்தின் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் தலைவர் பீ. கயிருதீன், ஆலோசகர் எம். எம். எம். இஃப்நிகார் மற்றும் விவசாயிகள் சிலரை உள்ளடக்கிய குழு குறித்த பிரதேசத்தில் களப்பயணத்தை மேற்கொண்டு சில பிரதேசங்களிலுள்ள விவசாய காணிகள் தொடர்பான முறைப்பாடுகளின்படி இழந்த நிலப் பிரதேசங்களை அடையாளம் காண சென்றிருந்தனர். நிலங்களை அடையாளம் கண்டு முடிந்த பின்பு அவர்கள் மீண்டும் தமது இடங்களுக்கு திரும்ப முற்பட்ட வேளையில் கல் ஓயா பிளான்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட தரப்பினர் அஹமட் அவர்களது வாகனத்தை நிறுத்தி நிஹால் அகமட் உள்ளிட்ட குழுவினர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு ஏறத்தாழ 25 நபர்பளால் பல மணித்தியாலங்களாக அவர்களை தாக்கி மரண அச்சுறுத்தல் விடுத்து அசாதாரணமான முறையில் மானபங்கப்படுத்தியதுடன் அவர்களது உடைகளை கழையுமாறு கட்டாயப்படுத்தி அதனை படமெடுத்து அவர்கள் இது தொடர்பில் புகார்களை வழங்க முற்பட்டால் அவ் படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினர்.
நிஹால் அகமட் உட்பட்ட தரப்பினர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை சம்பாந்துரை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் நில உரிமை தொடர்பான செயற்பாட்டாளர்கள் மீதான கொடூரமான தாக்குதலை PARL வன்மையான கண்டிக்கின்றது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உரிய அதிகாரிகள் உடனடியாக முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் நிலம் பறிபோன விவசாயிகளது பிரச்சனைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி இனியும் தாமதிக்காமல் தனிநபர் மற்றும் கூட்டு நிவாரணம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் PARL அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
…………………
சந்துன் துடுகல
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி
PARL மக்கள் காணி ஆணைக்குழு ஆணையாளர்கள்
ஏர்மீசா (T)டீகல
(G)கொட்ப்ரி மலர்நேசன்
இரோமி பெரேரா
ஜன்சிலா மஜீட்
மகேந்திரன் திருவரங்கன்
பிரியலால் சிரிசேன
சஜீவ சாமிக்கர
சரளா இமானுவல்
கணேசலிங்கம்
W. F. பிரியங்கர கொஸ்டா