
பாணம காணிப் போராட்டத்திற்கு
Published
மக்கள் தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்லமுடியும் எனும் அமைச்சரவைத் தீர்மானத்தினைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் - பாணம மக்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை
பாணம காணிப் போராட்டத்திற்கு ஆதரவாக PARL அறிக்கை
பாணம காணிகளை அக்காணிகளின் உரிமையாளர்களுக்கே மீண்டும் வழங்கவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்து இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகின்றன. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திலே பாணமயில் விமானப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணிகளை விடுவிப்பதென அன்றைய அரசாங்கம் முடிவுசெய்தது. சில கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்த 25 ஏக்கர் காணிகள் இதில் உள்ளடக்கப்படவில்லை ஏனெனில் அதில் கட்டப்படும் கட்டிடங்களை பிரதேசத்தின் காணியற்ற நபர்களுக்கு விநியோகிப்பதற்காக” ஆனால் இற்றைவரையில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்படாமலேயே உள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சாஸ்திரவெல மற்றும் ராகம்வெல கிராம மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து 2010 ஆம் ஆண்டு (யுத்தத்தின் பின்னர்) பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட நாளில் இருந்து இம்மக்கள் தமது காணிகளுக்கு மீண்டும் திரும்பிவருவதற்காகப் போராடி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு வருடத்தின் பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் திகதி இரவு முகமூடியணிந்த நபர்கள் சிலர் ஆயுதங்களுடனும் பொல்லுகளுடனும் ராகம்வெல கிராமத்தினுள் நுழைந்து குடிசைகளையும் பௌத்த விகாரையினையும் எரியூட்டி கிராமத்தவர்களையும் தாக்கினர். முன்னாள் பிரதேச சபைத் தலைவரின் (அப்போதைய ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தவராகக் குறிப்பிடப்படுபவர்) ஆதரவுடன் விமானப் படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இவ்வாறு எரியூட்டியமைக்கும் கிராமத்தவர்களை அவர்களின் காணிகளை விட்டுத் துரத்தியமைக்கும் பொறுப்பானவர்கள் என கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். சாஸ்திரவெலயில் இருந்து 75 குடும்பங்களும் ராகம்வெலயில் இருந்து 34 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டன. இதன் விளைவாக இம்மக்கள் கடந்த 10 வருடங்களாக வேறு குடும்பங்களின் தயவிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் பின்னர் விமானப் படையினால் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படவேண்டிய 25 ஏக்கர் காணிகளை அடையாளம் கண்டு ஜனாதிபதி செயலகத்தினால் அம்பாறை பிரதேச செயலாளருக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. எஞ்சியுள்ள காணிகள் அளக்கப்பட்டு சமுதாயத்தினரிடம் மீள ஒப்படைக்கப்படவேண்டும் என ஆகஸ்ட் 24 ஆம் திகதி செயலகம் வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் இற்றைவரை எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இதனால் ராகம்வெல மக்கள் அவர்களின் காணிகளினுள் 2016 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி பலவந்தமாக நுழைந்தனர். இம்மக்களை வெளியேற்ற பொத்துவில் பொலிசாரும் லகுகல பிரதேச செயலாளரும் முயற்சித்தனர். ஆனால் இம்மக்கள் மறுத்துவிட்டனர். இம்மக்களை வெளியேற்றுவதற்குப் பொலிசார் பொத்துவில் நீதவானிடமிருந்து இடைக்கால உத்தரவினைப் பெற்றுக்கொண்டனர் . இரண்டு நாட்களின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த உத்தரவிற்கு எதிராக மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். மார்ச் 30 ஆம் திகதி உண்மையான குடியிருப்பாளர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கிய பொத்துவில் நீதவான் நீதிமன்றம் தமது காணிகளுள் நுழைந்து அதில் தொடர்ந்தும் வசிப்பதற்கான இம்மக்களின் உரிமையினை இம்மக்களுக்கே வழங்கியது. நீடுறுதியான தீர்வினைக் காண்பதற்காக காணியினை அளவீடு செய்வதற்கு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எழுத்துமூலமான உத்தரவினையும் வழங்கியது. இருப்பினும் 2016 மே 24 ஆம் திகதி லகுகல பிரதேச செயலாளரினால் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் தமது காணிகளை விட்டு வெளியேறவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் மறுத்துவிட்டனர். மாறாகத் தமது வீடுகளை மீளநிர்மாணிப்பதற்காகவும் பயிர் செய்வதற்காகவும் இம்மக்கள் தமது காணிகளைத் துப்பரவு செய்யத் தொடங்கினர்.
தற்போது ராகம்வெல மக்கள் தமது சொந்தக் காணிகளுள் பலவந்தமாக நுழைந்து தமது குடிசைகளில்; தொடர்ந்தும் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. மேலும் இக்காணிகளுக்கு அருகாமையில் விமானப் படையினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர். கிராமத்தின் நுழைவிடம் உள்ளிட்ட பிரதேசத்தின் கட்டுப்பாட்டினையும் தம்வசம் வைத்துள்ளனர். தமது காணிகளை விட்டு வெளியேறுவதற்குத் தாம் கொழும்பில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருப்பதாக விமானப் படையினர் குறிப்பிடுவதாகச் சமுதாயத் தலைவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
நீதவானின் கட்டளைக்கு எதிராக அரசு மேன்முறையீடு செய்துள்ள அதேவேளை, அமைச்சரவைத் தீர்மானம் அமுல்படுத்தப்படவேண்டும் என ராகம்வெல மக்கள் ஒன்பது அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வழக்கு இன்னும் நடைபெறுகின்றது.
இக்காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் சட்டபூர்வமாகக் கையளிப்பது தொடர்பில் அரசாங்கம் இற்றைவரை எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை என்பதுடன் பாணம மக்களுக்கு இதுவரையில் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை. ஒரு தசாப்த கால இடப்பெயர்விற்கும் வருமான இழப்பிற்கும் இவர்களுக்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை. இடப்பெயர்விற்கு முன்னர் சமுதாயம் பயிர்ச்செய்கையிலும் மீன்பிடியிலும் தங்கியிருந்தது. ஆனால் 2010 இற்கும் 2016 இற்கும் இடையில் இந்த வாழ்வாதாரங்களை இம்மக்களினால் அணுகமுடியவில்லை.
இம்மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்தமாகி விட்டது. இம்மக்களின் காணிகளை அவர்களுக்கே மீண்டும் வழங்கவேண்டும் என அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டு ஐந்து வருடங்களாகிவிட்டன. ஆனால் பாணம மக்கள் தமது காணிகளுக்குத் திரும்புவதற்காக இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றனர். காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு (PARL) இடம்பெயர்ந்த பாணம மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றது. மேலும் அமைச்சரவைத் தீர்மானத்தினை அமுல்படுத்தவேண்டும், தங்கள் காணிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றவேண்டும் மற்றும் தமது வீடுகளுக்குச் செல்லத் தம்மை அனுமதிக்கவேண்டும் என்று இம்மக்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கைகளைக் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.