
மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையின் சுருக்கம்- நிலங்களுக்கான உரிமை இழப்பு
Published
இன்று முதல், மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையின் சுருக்கம் தினமும் மூன்று பகுதிகளாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இது அதன் முதல் பகுதி ஆகும்.
நிலங்களுக்கான உரிமை இழப்பு
நிலங்களுக்கான உரிமை இழப்பு என்பது ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் காணியினை அல்லது சொத்தினை அவர்களின் உடைமையிலிருந்து அகற்றுவதாகும்.
காணியின் உடைமை பறிப்பு என்பது ஒரு பன்முகப் பிரச்சினையாகும். இது வாழ்வாதாரங்களையும், சமுகப் பாதுகாப்பினையும், சமுக நடமாட்டத்தினையும், சுற்றாடல் நீதியினையும், அடையாளத்தினையும் பாதிக்கின்றது. ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான காணி உடைமைப் பறிப்புப் பிரச்சினைகள் இராணுவமயமாக்கத்துடனும், நிறுவன ரீதியாக வேரூன்றியுள்ள இனப் பாகுபாட்டுடனும் தொடர்புபட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மாதிரி, பணித்துறைச் செயலிழப்புக்கள் மற்றும் முறைமை வாய்ந்த விலக்கிவைப்புக்கள், குறிப்பாக மலையக மக்கள் தொடர்பானவை, இலங்கையில் காணி உடைமைப் பறிப்புக்கு பிரதான பங்களிப்பு செய்பவையாக இருக்கின்றன. ஆணைக்குழுவின் விசாரணையின் அடிப்படையில் பின்வரும் பிரதான காரணிகள் உடைமை பறிப்பினை ஏற்படுத்துவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன:
●இராணுவமயமாக்கம்
●இனப்பாகுபாடு
●இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி
மாதிரியிலுள்ள தவறுகள்
●பணித்துறைச் செயலிழப்புக்கள்
●மலையக மக்களை திட்டமிட்ட முறையில்
விலக்கிவைத்தல்
●சாதி அடிப்படையில் திட்டமிட்டு விலக்கிவைத்தல்
இராணுவமயமாக்கம்
1. மோதலின் போது வடக்கு மற்றும் கிழக்கில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினதும் பொலிஸாரினதும் கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றன. இதனால் முன்பு அப்பிரதேசங்களில் வாழ்ந்த சமுதாயங்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களின் பூர்வீக நிலங்களுக்குத் திரும்ப முடியாதவர்களாக இருக்கின்றனர்.
2. முள்ளிக்குளம், கேப்பாப்பிளவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே காணிக்கான உரிமை மறுக்கப்படுவது பொதுவாக இன அடிப்படையிலான பாகுபாட்டுடன் தொடர்புபடுகின்றது.
3. உள்ளுராட்சி அதிகாரிகள் இராணுவத்திரை வெளியேறுமாறு கேட்பதற்கு பயத்தின் காரணமாகத் தயக்கமடைவதாகக் கலந்தாலோசிப்புக்கள் வெளிக்காட்டுகின்றன.
இனப்பாகுபாடு
1. இன ரீதியாகப் பக்கச்சார்பான கொள்கைகள், மீள்குடியேற்றத்திற்கான மற்றம் வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான இன அடிப்படையிலான கொள்கைகள் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அல்லது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகக் காணிப் பிணக்குகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.
● கல் ஓயாத் திட்டம் (அம்பாறை)
● மகாவலி அபிவிருத்தித் திட்டம்
● நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டம் (அம்பாறை)
2. இந்தக் குடியேற்றங்களின் நடவடிக்கை முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் சிறுபான்மைச் சமுதாயங்கள் இவற்றினை அவநம்பிக்கையுடன் நோக்குகின்றன (பிராந்திய ரீதியாகக் குடிசன அமைப்பியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உள்;ர்க் குழுக்களின் தேர்தல் அதிகாரங்களை பலவீனப்படுத்துவதற்கான உள்நோக்கங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது)
3. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை வனஜீவராசிகளின் பாதுகாப்புக்காக வனக் காணி என்றும் அல்லது தொல்லியல் தளங்கள் என்றும் சடுதியாகவும், தன்னிச்சையாகவும் தீர்மானித்து எல்லைகளைக் குறித்தல். சிறுபான்மைச் சமுதாயங்களிடமிருந்து மாத்திரம் காணிகள் பெற்றுக்கொள்ளப்படுகையில் இந்த விடயம் இனரீதியான பிரச்சினையாக மாறுகின்றது.
● உதாரணம்:- முல்லைத்தீவு, புத்தளம், திருகோணமலை
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மாதிரியிலுள்ள தவறுகள்
1.பெருமளவுக்கு மக்களிடமிருந்து உடைமைகளைப் பறிப்பதன் மூலம் கிராமப் பிரதேசங்களிலுள்ள காணிகளைத் தொழிற்சாலை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம் என்கின்ற ஒரு மூட நம்பிக்கையின் அடிப்படையிலேயே அரசின் நவதாரளவாத பொருளாதார அணுகுமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது.
2. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலை மற்றும் வர்த்தகப் பொருளாதாரத்தில் இவ்வாறு உடைமை பறிக்கப்பட்ட மக்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
3. பல்தேசிய விவசாய வியாபாரங்களுக்கு வசதியை வழங்குவதற்காக பெருமளவிலான காணிகள் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதே வேளை வறிய விவசாயிகளின் காணிப் பங்குகள் கடந்த காலங்களில் சுருங்கி வருகின்றன.
● மொனராகலை
● அம்பாந்தோட்டை
● அநுராதபுரம்
4. நகரப் பிரதேசத்துக் காணிகள் உயர் பெறுமதியினைக் கொண்டுள்ள சந்தைப் பண்டமாக மாறியுள்ள காரணத்தினால் நகரத்து வறிய மக்கள் அவர்களின் காணிகளிலிருந்து வெளியேறி புறநகர்ப் பகுதிகளுக்கோ அல்லது நகரத்துக்கு வெளியேயுள்ள வீடமைப்புத் தொகுதிகளுக்கோ செல்லுமாறு பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.
● கொழும்பு மற்றும் நீர்கொழும்பு : அதிகரித்து வரும் காணி விலைகளும், வாடகை அதிகரிப்புக்களும் காணியற்ற நிலைமை என்னும் பிரச்சினையினையும், வீடற்ற நிலை என்னும் பிரச்சினையினையும் நகரத்து வறிய மக்களின் மத்தியில் உருவாக்கி அவர்களை நகரத்திலிருந்து மென்மேலும் வெளியே விரட்டி வருகின்றன.
5. நாடு முழவதிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உட்கட்டமைப்புக்களுக்காகவும், பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
● மல்வத்து ஓயா : ஆற்றின் கீழ் பகுதியில் வாழ்ந்த கிராமத்து மக்கள் சுற்றுலாக் கருத்திட்டத்திற்கு வழிவிடுவதற்காக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
● பண்டாரவளை, அம்பாந்தோட்டை, கொழும்பு, நீர்கொழும்பு, சம்பூர், அருவாக்காடு: போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களினால் பல சமுதாய உடைமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
பணித்துறைச் செயலிழப்புக்கள்
1. வினைத்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாக தமது குறைகளை நிர்வாகிகள் புறக்கணித்து பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் செல்வாக்குப் படைத்தவர்களின் கோரிக்கைகளைத் துரிதப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
2. காணியின் பல்வேறு அம்சங்களைக் கையாள்கின்ற வெவ்வேறு அரச திணைக்களங்களின் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாத அடிப்படைக் குறைபாடு காணப்படுவதாக மக்கள் மேலும் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் காரணமாக உள்;ராட்சி அதிகார சபை ஒன்று காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போது சமகாலத்திலே மற்றைய அதிகார சபை அதே காணிக்குச் செல்வதற்கான அனுமதியினைத் தடைசெய்கின்றது.
3. இவ்வாறான வெவ்வேறு அரச திணைக்களங்களுக்கு மத்தியிலான பதற்றங்கள் மக்களின் காணிப் பிரச்சினையின் தீர்வினை மோசமான முறையில் பாதிக்கின்றன. காணியற்ற மக்கள் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதிலும் தமது உரிமைகளைப் பயன்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் மெத்தனமான மற்றும் குழப்பமான பணித்துறை நடவடிக்கைகளினால் பொதுவாகத் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
4. அனுமதிப்பத்திரங்களும், காணிக் கொடைகளும் உண்மையான உரிமையாளர்கள் இருந்த போதிலும் சட்ட விரோதமாக மாற்றப்பட முடியும் என்கின்ற காரணத்தினால் காணி அனுமதிப்பத்திரங்களின் வருடாந்தப் புதுப்பிப்புத் தொடர்பாகவும், ஏனைய நடவடிக்கை முறைகள் தொடர்பாகவும் மக்களின் மத்தியில் விழிப்புணர்வோ அல்லது அறிவோ இல்லாமல் இருக்கின்றமையினை தமக்குச் சார்பாக நேர்மையற்ற நிர்வாக அதிகாரிகள் பயன்படுத்த முடியும்.
●முல்லைத்தீவில் பணித்துறைச் சவால்களின் காரணமாகத் தங்களின் தற்காலிக அனுமதிப் பத்திரங்களை நிரந்தர உறுதிகளாக மாற்ற முடியவில்லை என்பதை நேர்காணப்பட்ட சமுதாயத்தினர் தெரிவித்தனர்.
5. 1935 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் (LDO) விவசாயக் குடிமக்களின் மத்தியில் காணி இல்லாத நிலைக்கு பதில் அளிப்பதற்காக கட்டுப்படுத்தப்பட்ட காணிக் குத்தகை முறையினை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற காணிகள் முதலில் அனுமதிப்பத்திரத்தின் கீழ் வழங்கப்பட்டு அதன் பின்னர் அவை கொடையாக வழங்கப்படுகின்றது.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்படும் போது குடும்பத்தின் ஆண் தலைவரை மாத்திரம் அங்கீகரித்து வாரிசுரிமையினை மூத்த மகனுக்கு மாத்திரமே வழங்குகின்றதே அன்றி தாய்க்கோ அல்லது ஏனைய பெண் பிள்ளைகளுக்கோ வழங்குவதில்லை.
6. மீள்குடியேற்றம் மற்றும் காணி விநியோகம் தொடர்பான இனரீதியாகப் பக்கச்சார்பான கொள்கை வகுத்தல்கள், நிர்வாகத் தடங்கல்கள், காணிகளைச் சட்டவிரோதமாக மாற்றுதல், வாரிசுரிமைப் பிரச்சினைகள் மற்றும் காணிக் கச்சேரி முறைமையினைத் தன்னிச்சையாகப் பயன்படுத்துதல் போன்றவை ஆணைக்குழவின் பொதுமக்கள் விசாரணையின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளுள் உள்ளடங்கியிருந்தன.
மலையக மக்களை முறைமை வாய்ந்த வகையில் விலக்கிவைத்தல்
1. பெருந்தோட்டச் சமுதாயங்களின் வாக்குரிமையினை அகற்றி அவர்களைத் தீர்மானம் வகுத்தல் செயன்முறையிலிருந்து முறைமைவாய்ந்த வகையில் விலக்கிவைத்தலானது அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மோசமாகப் பாதித்துள்ளது.
2. பணித்துறைச் செயலிழப்புக்கள் பெருந்தோட்டத் துறையில் காணியற்ற நிலையைத் தொடர்ந்து நிகழச் செய்திருக்கின்றது. பெருந்தோட்டச் சமுதாயங்களுக்குக் காணிகளை விநியோகிப்பதற்கான கொள்கை மாற்றங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் இந்நிலை தொடர்கின்றது.
3. மாற்றுத் தொழில்வாய்ப்புக்களைத் தேடி ஏற்கனவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறியவர்கள் இந்தத் திட்டங்களை அணுகமுடியாதவர்களாக இருக்கின்றனர். பெருந்தோட்டங்களில் கொத்தடிமை ஊழியர்களாக இருக்கின்ற பாரிய பிரச்சினையுடன் இவர்களின் காணியற்ற நிலைமை தொடர்புபட்டாலும் கூட இவர்களினால் இந்தத் திட்டங்களில் இருந்து பயன்பெற முடியவில்லை.
4. இந்தத் திட்டங்களினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் மண்சரிவும் ஏனைய இயற்கை அனர்த்தங்களும் நிகழும் வாய்ப்புள்ள இடங்களில் அமைந்துள்ளதாகவும் அவை மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதாகவும் PLC இன் கண்டறிதல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
● தெல்தோட்டை லூல்கந்துர தோட்டம்: இலங்கையின் முதலாவது தேயிலைத் தோட்டமாகும். இத்தேயிலைத் தோட்டத்தின் உரித்தாண்மை தொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட வேண்டுமெனவும், தொழிலாளர்கள் மத்தியில் காணி விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சாதி அடிப்படையில் முறைமை வாய்ந்த வகையில் விலக்கிவைத்தல்
1. காணி உரித்தாண்மையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நூறாண்டுகள் பழமையான வரலாற்றினைக் கொண்டிருப்பதுடன் இலங்கையின் இன முரண்பாடு மற்றும் இராணுவமயமாக்கலுக்கு முற்பட்டதாகவும் இருக்கின்றது.
2. தற்போது இராணுவத்தின் பிடியிலிருக்கும் காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட்டாலும் நீதவான் நலன்புரி நிலையத்தில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்களால் அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் வரமுடியுமா என்பது நிச்சயமாகத் தெரியாமல் இருக்கின்றது. ஏனெனில் அப்பிரதேசங்களில் அவர்களுக்கெனச் சொந்தக் காணிகள் இல்லை.
3. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் சாதிப் பின்புலம் இந்த மக்கள் தொடர்ந்தும் காணியற்றவர்களாக இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் முக்கியத்துவம் வழங்காமல் இருப்பதை பின்புல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
4. சிவில் யுத்தக் காலத்தில் நடைபெற்ற உள்நாட்டு இடப்பெயர்வின் போதும், இராணுவமயமாக்கலின் போதும், இராணுவமயமாக்கலை அகற்றிய வேளையிலும் தமிழ் மக்களின் அனுபவங்களில் சாதி என்பது மையமான வகிபாத்திரத்தினை வகித்திருக்கின்றது. மாறாக இன நல்லிணக்கத்திற்கும், சமுக, பொருளாதார அபிவிருத்திக்கும் வட மாகாணத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை வட மாகாணத்தில் அடக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்த சமுதாயங்களின் காணியற்ற பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.
5. ஒடுக்கப்பட்ட சாதியப் பின்புலத்தினைச் சேர்ந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் குடும்பங்கள் அவர்கள் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்த நேரத்தில் இருந்ததை விடப் பெரிய குடும்பங்களாக மாறியிருப்பதுடன் 1990களில் அவர்களுக்கு இருந்த காணித் தேவையினை விட இப்போது அதிக தேவை காணப்படுகின்றது.
6. இராணுவத்தின் பிடியிலிருக்கும் கிராமங்களில் சொந்தமாக நிலத்தினைக் கொண்டிராத, முகாம்களில் வசிக்கின்ற சிலர் தாம் தற்போது வாழ்கின்ற இடத்தில் தமக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இக்காணிகளில் தமது பிள்ளைகளுக்கு கல்விக்கான சிறந்த பாடசாலைகளும், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளும் போக்குவரத்தும் வழங்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
● நீதவான் நலன்புரி நிலையம் (யாழ்ப்பாணம்) உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஓர் முகாம் ஆகும். முகாமில் தற்போது 61 குடும்பங்கள் வசித்து வருவதுடன் கிட்டத்தட்ட 25 குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டில் வலிகாமம் வடக்கிலுள்ள வெவ்வேறு கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்ததிலிருந்து இங்கே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் அடக்கப்பட்ட சாதியச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்.
இரண்டாம் பகுதி நில காணி இழப்பைத் தடுக்க மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கையால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்கிறது. நிலம் கையகப்படுத்துதலின் முழு சுருக்கத்தையும் கீழே உள்ள 'கட்டுரையைப் பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் PDF நகலாகப் பதிவிறக்கம் செய்யலாம்.