
மன்னார் ஆபத்தில் உள்ளது : முன்னேற்றமா? இடம்பெயர்த்தலா?
Published
அறிமுகம்
இலங்கையின் மிகப்பெரிய தீவான மன்னார் தீவு, சூழலியல்; சார்ந்த செழிப்பு மற்றும் தீவிரமான மனித போராட்டம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஓர் இடமாக உள்ளது. ஏறத்தாழ 75,000 மக்கள் வசிக்கும் இடமாக விளங்கும் இதன் மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்கள், பல தசாப்தகால போர், இடப்பெயர்வு மற்றும் வறுமை ஆகியவற்றின் மத்தியிலும் பல தலைமுறைகளாக இங்கு தமது வாழ்க்கையை நிலைநிறுத்தியுள்ளன. ஆயினும், இம்முறை 'அபிவிருத்தி' என்னும் பெயரில், இன்று இந்த சமுதாயங்கள் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
குறிப்பாக, பாரிய அளவிலான காற்றாலை மின்னுற்பத்தியின் விரிவாக்கம் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய இரண்டு கருத்திட்டங்கள் எதிர்ப்பு வெடித்தெழுந்த சந்தர்ப்பங்களாக (flashpoints of resistance) மாறியுள்ளன. இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மற்றும் வலுசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றிற்;கு முக்கியமானவை என இவை இரண்டிற்கும் முன்னுரிமையளிக்கப்படும் அதேவேளை, மன்னாரில் இவை தொடர்ச்சியான போராட்டங்களைத் தூண்டியுள்ளன. குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரை, இந்தக் கருத்திட்டங்கள் முன்னேற்றத்தின் அடையாளங்கள் அல்ல, மாறாக, கலந்தாலோசனை அல்லது காப்புகள் இன்றித் திட்டமிடப்படும் அபிவிருத்தி எவ்வாறு வாழ்வாதாரங்களை அழிக்கும், குடும்பங்களை இடம்பெயரச் செய்யும் மற்றும் பலவீனமான சூழற்தொகுதி முறைமைகளை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்பதை நினைவூட்டுபவையாக அமைகின்றன.
புவியியல் ரீதியாக, இலங்கையில் மிகவும் பாதிப்புறக்கூடிய நிலையிலுள்ள பிராந்தியங்களுள்; மன்னார் ஒன்றாகும். உள்நாட்டு யுத்தத்தின்போது, மன்னார் மாவட்டத்தின் மக்களும்; மிகவும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் அதிகளவிலான உள்நாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அத்துடன், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன் பல பிரதேசங்களில் அவை இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளன.
தீவின் பெருமளவிலான பகுதி கடல் மட்டத்தில் அல்லது அதற்குக் கீழேயே காணப்படுவதால், விசேடமாக, சுற்றாடல்; சீர்குலைவு ஏற்படுவதற்கான கூருணர்வை இது கொண்டுள்ளது. வலசை போகும் பறவைகள் மற்றும் கடல் வளங்களுக்கு பிரசித்தி பெற்ற இப்பகுதியானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயிர்ப்பல்வகைமைக் கேந்திர நிலையத்தின் ஒரு பகுதியாக உள்ள அதேவேளை, பல தலைமுறைகளாக மக்களை அதன் நிலம் மற்றும் கடலுடன் இணைக்கும் கலாசார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. ஆயினும், பாதுகாக்கப்படுவதற்குப் பதிலாக, மக்களை விட மேலாக இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பிரித்தெடுப்புக் கருத்திட்டங்களுக்கான ஒரு பரிசோதனைக் களமாக மன்னார் மாறியுள்ளது.
மீனவ சமூகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரால் தற்போது நடத்தப்பட்டு வரும்; போராட்டங்கள் அபிவிருத்திக்கு எதிரானவை அல்ல. மாறாக, அவை நிலம், நீர் மற்றும் சமுதாயங்களை மதிக்கும் அபிவிருத்திக்கான ஓர் அழைப்பாகும். இடப்பெயர்வு,சூழலியல் அழிவு, மற்றும் சமுதாயங்களின் உரிமைகள் மறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடைய முடியாது என மன்னார் மக்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களது போராட்டம், இலங்கை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பரந்தளவிலான கேள்வியைப் பிரதிபலிக்கின்றது: நாம் எந்த வகையான அபிவிருத்தியை விரும்புகின்றோம், மற்றும் அது உண்மையிலேயே யாருக்கானது?
பின்னணி: மன்னாரின் பலவீனமான நிலத்தோற்றம்
வட மாகாணத்தில் உள்ள மன்னார் தீவு, மன்னார் வளைகுடாவின் ஆழமற்ற நீர்ப்பரப்பின் குறுக்கேயான ஓர் ஆற்றிடைப் பாலத்தின் மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தீவான இது, 26 கிலோமீட்டர் நீளமும் ஏறத்தாழ 6 கிலோமீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இத்தகைய பரப்பைக் கொண்டுள்ளபோதும், மன்னார் தனித்துவமான பாதிப்புறு நிலையை கொண்டுள்ளது: கடல் மட்டத்திற்கு மேலாக 7.8 மீட்டர் சராசரி உயரத்தையே இத்தீவு கொண்டுள்ளதுடன், தெற்கு பார், தோட்டவெளி, எருக்கலம்பிட்டி மற்றும் கொன்னையன் குடியிருப்பு போன்ற பல பிரதேசங்கள் கடல் மட்டத்தில் அல்லது அதற்கும் கீழேயே உள்ளன. இத்தகைய பலவீனமான புவியியல் அமைப்பைக் கொண்டிருத்தல் என்பதன் பொருள், பாரிய பிரித்தெடுப்புக் கருத்திட்டங்கள் மாத்திரமன்றி, சிறிய அளவிலான சுற்றாடல் இடையூறுகள் கூட வெள்ளம், கடல் நீர் ஊடுருவல் மற்றும் நிலத்தின் தரமிழப்பு ஆகிய கடுமையான அபாயங்களை முன்வைக்கின்றன என்பதாகும்.
மன்னாரின் சூழலியல் முக்கியத்துவமும் சம அளவில் குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகின்றது. இந்தத் தீவு காவிரி நீர்ப்படுகையினுள் அமைந்துள்ளதுடன்; சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உயிர்ப்பல்வகைமை கேந்திர நிலையத்தின் ஒரு பகுதியாகவும் காணப்படுகின்றது. அதன் கரையோர நீர்நிலைகள், களப்புகள் மற்றும் சதுப்புநிலத்தைச் சூழ்ந்த பகுதிகள் ஆகியவை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமாக உள்ளதுடன் அரிப்பு மற்றும் புயல்களிலிருந்து சமுதாயங்களையும் பாதுகாக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் கண்டங்களின் ஊடாகப் பயணிக்கும் பறவைக் கூட்டங்களுக்கு இடமளிக்கும், வலசை போகும் பறவைகளின் சரணாலயம் ஒன்றாகவும் மன்னார் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இயற்கைச் சொத்துக்கள் விஞ்ஞானரீதியான ஆர்வத்தை மாத்திரம் ஏற்படுத்துவதில்லை; அவை உள்ளுர் வாழ்வாதாரங்கள் மற்றும் கலாசார அடையாளம் ஆகியவற்றின் அடித்தளமாகவும் காணப்படுகின்றன. மீன்பிடி, சிறிய அளவிலான விவசாயம் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் பனை வளர்ப்பு ஆகியவை உள்ளுர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளதுடன், இவை பல்லாயிரக்கணக்கான குடும்பங்களையும் ஆதரிக்கின்றன.
ஆயினும், மன்னார் மக்கள் மிகவும் கடினமான கடந்த காலமொன்றின் வடுக்களை சுமக்கின்றனர். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது, பல தசாப்தங்களாக, இத்தீவு அதிகளவில்; இராணுவமயமாக்கப்பட்ட வலயமொன்றாகக் காணப்பட்டிருந்தது. இங்கு வசித்தோர் இடப்பெயர்வு,உடமைகள் அழிவு மற்றும் தங்களது சொந்த நிலம் மற்றும் கடலுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவற்றை அனுபவித்தனர். பல குடும்பங்கள் 2009 இற்குப் பின்னரே தங்களது வாழ்க்கையை புதிதாக மீளக் கட்டியெழுப்பும் பொருட்டு இங்கு திரும்பின. ஆனால் அவர்களின் மீட்சி மிகவும் மெதுவாக இடம்பெறுவதுடன்; வறுமை, தொழில்வாய்ப்பின்மை மற்றும் மோசமான உட்கட்டமைப்பு ஆகியவை தொடர்ந்தும் அவர்களுக்கு சவால்களாக உள்ளன. இந்தத் துன்பங்;களின் பின்னணியில், 'அபிவிருத்தி' என்னும் வாக்குறுதி பெரும்பாலும் ஓர் உயிர்நாடியாக முன்வைக்கப்படுகிறது. ஆயினும், மன்னாரில் வசிப்போருக்கு, இந்த வாக்குறுதிகள் துரிதமாக அச்சுறுத்தல்களாக மாறி வருகின்றன
பாரிய அளவிலான காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை தற்;;போது தீவை மீளவடிவமைக்கின்றன. ஆனால் அதன் மக்களின் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த சம்மதமின்றியே இது இடம்பெறுகின்றது. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன, நீர்நிலைகள் தடுக்கப்பட்டுள்ளன, மற்றும் மீன்பிடி நிலங்;கள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை இடப்பெயர்வை எதிர்நோக்கியுள்ளன. ஆயினும், இம்முறை யுத்தத்தினால் அல்ல, ஆனால் முன்னேற்றம் என்னும் பெயரில் ஊக்குவிக்கப்படும் கருத்திட்டங்களினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது, மன்னார் மக்களைப் பொறுத்த வரையில், இங்குள்ள கேள்வி அபிவிருத்தி இடம்பெற வேண்டுமா என்பதல்ல, மாறாக அவர்களின் பலவீனமான தீவையும் அதன் மக்களின் மாண்பையும் காக்கும் விதமொன்றில்; இது இடம்பெற முடியுமா என்பதாகும்.
மணல் அகழ்வு: இருப்பிற்கான ஓர் அச்சுறுத்தல்
மன்னார் கரையோரத்தின்; மணற்பாங்கான பகுதிகளுக்கு அடிப்புறத்தில் இல்மனைட் (ilmenite), ரூடைல் (rutile), கார்னெட் (garnet), சேர்கன்(zircon) மற்றும் சிலிமனைட் (sillimanite) உள்ளடங்கலான பெறுமதி வாய்ந்த கனிய மணல்களின் பரந்த வைப்புகள் காணப்படுகின்றன. மட்பாண்டங்கள் முதல் விமானப் போக்குவரத்து வரையிலான கைத்தொழில்களில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் இந்த கனியங்கள், அரச முகவராண்மைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளன. பாரியளவிலான பிரித்தெடுப்பிற்கான முன்மொழிவுகள் வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியவற்றிற்கு வாக்குறுதியளிக்கின்றன. ஆனால் மன்னார் மக்களுக்கு, மணல் அகழ்வு என்பது ஒரு வாய்ப்பினை அல்ல, மாறாக இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் ஒன்றினையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி வி. பிரதீபராஜாவின்கருத்தின் பிரகாரம்,மன்னாரின் புவியியல்சார் பாதிப்புறு நிலையானது அத்தகைய பிரித்தெடுப்பினைக் குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தானதாக ஆக்குகிறது. இலங்கையின் அதிக பிரசித்தி பெற்ற, உறுதியான உயர்வான நிலத்தில் அமைந்துள்ள கனிய மணல் படிவான புல்மோட்டையைப் போலன்றி,மன்னார் மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அகழ்வை மேற்கொள்வதற்கு 12 மீட்டர் ஆழம் வரை அகழ்வதற்கான தேவை ஏற்படும் என்பதுடன்; ஏற்கனவே பலவீனமான பிரதேசங்களில் பாரியளவிலான மணலைக் கொட்டவும் வேண்டும். இந்தச் செயன்முறை மண்ணின்; கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை இல்லாதொழித்து, நிலத்தின் தாழ்வு நிலையை அதிகரித்து அத்துடன் தென்னை மற்றும் பனை மரங்கள் போன்ற கரையோரத் தாவரங்களை அழிக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
இத்தகைய சீர்குலைவுகளின் விளைவுகள் உடனடி அகழ்வுத் தளங்களுக்கு அப்பாலும் நீண்டு செல்கின்றன. கலாநிதி பிரதீபராஜா குறிப்பிடுவது போன்று, இந்தப் பிரித்தெடுப்பினால் நன்னீர் நிலத்தடி நீர்ப்படுகைகளில் கடல் நீர் கலந்து மாசடையக்கூடும் என்பதுடன் இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான குடிநீர் பாதுகாப்பற்றதாகவும் அமையும். அதிகரித்து வரும் கடல் நீர் ஊடுருவல் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவதுடன், ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள தீவின் விவசாய அடித்தளத்தையும் மேலும் குறைவடையச் செய்யும். சுருக்கமாக, கனிய மணல் அகழ்வானது மன்னார் ஏற்கனவே எதிர்கொண்டு போராடி வரும் காலநிலை மற்றும் சுற்றாடல் அபாயங்களை துரிதப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை முன்வைக்கின்றது.
சமுதாயச் செயற்பாட்டாளர்களும் இதனை ஒத்த கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வடக்கைச் சேர்ந்த சுற்றாடல்; ஆர்வலரான ஏ. ராகுலன், புல்மோட்டையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கின்றார்: அங்கு பல தசாப்தங்களாக கனிய அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், உள்ளுர் சமுதாயம் சிறியளவிலான நன்மையையே பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, சூழலியற்;சீரழிவு குறிப்பிடத்தக்களவில் ஏற்பட்டுள்ளது. மன்னாரில் பாதிப்புகள் இன்னும் மோசமாக அமையும் என அவர் எச்சரிக்கின்றார்
'புல்மோட்டையின் நிலங்கள் உயர்ந்தவை, ஆனால் மன்னார் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அவர்கள் இங்கே அகழ்வை மேற்கொண்டால், தீவு மூழ்கிவிடும்.'
குடியிருப்பாளர்களுக்கு இது தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல, மாறாக இருப்பு சார்ந்த பிரச்சினையாகும். தீவு வாழ்க்கையின் அடிப்படையான நிலம், நீர் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை இந்த அகழ்வு அச்சுறுத்துகின்றது. மன்னார் மக்கள் உள்நாட்டு யுத்தத்தின்போது ஏற்கனவே பல தசாப்தகால இடப்பெயர்வு மற்றும் இழப்புகளை அனுபவித்து விட்டனர். தற்போது அகழ்வு காரணமாக தங்களின் தீவை இழக்க நேரிடுவதற்கான சாத்தியமுள்ளது என்னும் உணர்வு பலருக்கு இரண்டாவது தடவையாக, இம்முறை அபிவிருத்தி என்னும் பதாகையின் கீழ், உடைமைகள் பறிக்கப்படுவது போன்றதாக உள்ளது.
காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள்: சம்மதம் இன்றிய அபிவிருத்தி
தெற்காசியாவில் அதிக காற்று வீசும் பிராந்தியங்களில் மன்னார் ஒன்றாகும். இதன் காரணமாக, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்திக்கு மிகவும் ஏற்ற கவர்ச்சிகரமான பிரதேசமாக இது அமைந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கம், இத்தீவில் பாரிய அளவிலான காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்தியுள்ளது. புதைபடிவ எரிபொருள்களில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும் நாட்டின் வலுசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் இந்தக் கருத்திட்டங்கள் அத்தியாவசியமானவை என்னும் கருத்து கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆயினும், மன்னாரைச் சேர்ந்த சமுதாயங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகளைக் காற்றாலை மின்னுற்பத்தி பெற்றுத்தரவில்லை. அதற்குப் பதிலாக, காணி பாராதீனப்படுத்தலின் ஒரு புதிய அலை, சுற்றாடல் சீர்குலைவு, மற்றும் சமூக ஓரங்கட்டல் ஆகியவற்றையே அறிமுகம் செய்துள்ளது.
கலந்தாலோசனை மற்றும் சம்மதமின்மை
இந்தக் கருத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த சம்மதம்; (FPIC) இன்றியே திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை குடியிருப்பாளர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகின்றனர். தங்கள் பொது நிலங்களும் மேய்ச்சல் பிரதேசங்களும் சுழலிகள்; மற்றும் அணுகல் வீதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை அவற்றின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கும் வரை பல குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை. மன்னார் மீனவர்கள், விவசாயிகள் அல்லது உள்ளுர் அதிகாரசபைகளின் மிகக்குறைந்த ஈடுபாட்டுடன் அல்லது எவ்வித ஈடுபாடும் இன்றி, மத்திய அரசாங்கத்தின் தீர்மானங்களால் இந்தக் கருத்திட்டங்கள் இயக்கப்படுகின்றன என சிவில் சமூகக் குழுக்கள் வாதிடுகின்றன
சுற்றாடல் மற்றும் சமூகத் தாக்கங்கள்
மன்னாரைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க மதகுருவும் நீண்டகால சமூக செயற்பாட்டாளருமான அருட்தந்தை எம். மார்கஸ் அவர்களது கூற்றின் பிரகாரம், காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் இப்பிரதேசத்தில், பின்வருவன உள்ளடங்கலான, 'பிரதான பத்துப் பிரச்சினைகளை'உருவாக்கியுள்ளன:
• நிர்மாணப் பணிகளின் காரணமாக கிராம வீதிகள் மற்றும் பொதுக் காணிகள் அழிப்பு.
• நீர் ஆதாரங்கள் மற்றும் பாரம்பரிய நீர்ப்பாசன முறைமைகளின் சீர்குலைவு.
• பறவைகள் வலசை போகும் பயணப் பாதைகள், குறிப்பாக, பிரதானமான பறவைகள் பிரதேசங்கள் (IBAs) என சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அச்சுறுத்தல்.
• மேய்ச்சல் மற்றும் மீன்பிடிப் பிரதேசங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல்.
• சுழலிகள் (turbine) அமைந்துள்ள இடங்களைச் சுற்றிலும் மணல் அடர்ச்சி (compaction) மற்றும் மோசமான வடிகாலமைப்பு காரணமாக வெள்ளம் ஏற்படுவதற்கான அதிகரித்த அபாயம்.
கடற்கரை, களப்புகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அவர்களது பாரம்பரிய வாழ்வாதாரங்களைப் பாதிப்பிற்கு உட்படுத்துகின்றது எனவும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அறிக்கையிடுகின்றனர். முன்னொரு காலத்தில் சமுதாய வெளியாக காணப்பட்ட பகுதிகள் தற்;போது தனியார் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் நிலமாக அடையாளப்படுத்தப்பட்டு வேலியிடப்பட்டுள்ளதுடன் இது புறந்தள்ளப்படல் மற்றும் உடைமை பறிப்பு என்னும் ஆழமான உணர்வுகளையும் ஏற்படுத்துகின்றது.
எப்பாவல வழக்கிலிருந்தான பாடங்கள்
கடந்த காலங்களில் இயற்கை வளங்கள் தொடர்பில் இதனை ஒத்த போராட்டங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதற்கான ஒரு மைல்கல் உதாரணம் எப்பாவல பொஸ்பேற்று வழக்கு (புலங்குளம மற்றும் ஏனையோர் எதிர். செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, ஜ2000ஸ 3 3 SLR 243) ஆகும். நாட்டின் சுற்றாடல் மற்றும் மனித உரிமைகள் சட்டவியலில்; குறிப்பிடத்தக்க அடையாளம்; ஒன்றாக இது பெரிதும் பாராட்டப்படுகின்றது.
1990களின் இறுதிப் பகுதிகளில், உரத்தின் பிரதான உட்சேர்க்கைப் பொருளொன்றான பொஸ்பேற்றைப் பிரித்தெடுப்பதற்காக அனுராதபுரத்தின் எப்பாவல பிரதேசத்தில் ஏறத்தாழ 56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை அகழ்வதற்கான ஒரு கருத்திட்டம் முன்மொழியப்பட்டது. வெளிநாட்டுக் கம்பனிகள் மற்றும் அரசை ஈடுபடுத்திய இந்த ஒப்பந்தம், பொருளாதார இலாபத்திற்கு உறுதியளித்தபோதும் விவசாய சமூகங்களின் வாழ்வாதாரங்கள், தொல்பொருள் மரபரிமை மற்றும் பிராந்தியத்தின் சுற்றாடல் ஆகியவற்றிற்கு கடுமையான அபாயங்களை விளைவிப்பதாக அமைந்தது. சிவில் சமூகத்தின் ஆதரவுடன், குடியிருப்பாளர்கள் இந்தக் கருத்திட்டத்தை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினர்.
ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பில், அரசியலமைப்பின் 11 ஆம் உறுப்புரையின்; கீழான வாழ்வதற்கான உரிமை என்பது ஆரோக்கியமான சுற்றாடல் ஒன்றிற்கான உரிமையையும் குறிக்கின்றது என உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இயற்கை வளங்கள் சுரண்டலுக்குள்ளாக்கப்பட முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபிவிருத்தி என்பது சமூக நீதி, சுற்றாடல் பாதுகாப்பு, மற்றும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களின் பங்கேற்பு ஆகியவற்றுடன் பொருளாதார நன்மையை சமநிலைப்படுத்த வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.
மன்னாருக்கான பொருத்தம்
எப்பாவல தொடர்பில் எழுப்பப்பட்ட எச்சரிக்கைகள் இன்று மன்னார் தொடர்பில் பலமாக எதிரொலிக்கின்றன. பொஸ்பேற்று அகழ்வு அனுராதபுரத்தின் விவசாய குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படக்கூடுமென அச்சுறுத்தியதைப் போன்று, கனிய மணல் அகழ்வும்; காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களும் மன்னாரின் மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்களின் உடைமை பறிப்பிற்கான அச்சுறுத்தலை விடுக்கின்றன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், அரசு மற்றும் தனியார் தரப்புகள் அக்கருத்திட்டங்களை 'அபிவிருத்தி' எனக் கட்டமைத்த அதேவேளை உள்ளுர் மக்கள் புறந்தள்ளப்படல், சுற்றாடல் சேதம் மற்றும் அவர்களின் மூதாதையரின் நிலங்களை இழக்கும் நிலை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
பல்வேறு ஒற்றுமைகள் வெளிப்படையாகத் தோன்றுகின்றன:
•சம்மதம் இன்றிய வளச் சுரண்டல்: எப்பாவல மற்றும் மன்னார் ஆகிய இரண்டு இடங்களிலும், உள்ளுர் சமூகங்கள் முதன்மைப் பங்கீடுபாட்டாளர்;களாக காணப்பட்டபோதும், அவர்களுடன் அர்த்தபூர்வமாகக் கலந்தாலோசிக்கப்படவில்லை.
•சூழல்சார்; பலவீனம்: பலவீனமான சூழற்தொகுதி முறைமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எப்பாவல வழக்கில் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. தாழ்வான நிலப்பரப்பு மற்றும் உலகளாவிய சூழலியல் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்டுள்ள மன்னார் தொடர்பில் இன்னும் அதிக கவனம் தேவைப்படுகின்றது.
•தலைமுறைகளுக்கிடையேயான நீதி: இயற்கை வளங்கள் தற்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது. மன்னாரில் பாரிய அளவிலான மணல் அகழ்வு அல்லது சரியாக திட்டமிடப்படாத காற்றாலை மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுதல், வாழ முடியாத தீவினை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லவேண்டிய அபாயத்தை முன்வைக்கின்றது.
•நீதியுடனான அபிவிருத்தி: உண்மையான அபிவிருத்தி என்பது மாண்பு, உரிமைகள் மற்றும் நிலைபெறுதன்மை ஆகியவற்றை மதித்தல் வேண்டும் என்பதைத் தீர்ப்பு மீள உறுதிப்படுத்தியது. மன்னாரின் தற்போதைய பயணப்பாதை இந்த தராதரத்;தை எட்டவில்லை.
எப்பாவல வழக்கு, அழிவுகரமான கருத்திட்டங்களை எதிர்ப்பதற்கான ஒரு சட்ட மற்றும் தார்மீக முன்நிகழ்வை இலங்கை ஏற்கனவே கொண்டுள்ளது என்பதற்கான ஒரு நினைவூட்டலாகும். எப்பாவல பொஸ்பேற்றைப் பாதுகாத்த அதே கோட்பாடுகள் மன்னார் மீதான தீர்மானம் மேற்கொள்ளலுக்கு வழிகாட்டுதல் வேண்டும்: இலாபத்திற்கு முன்னால் மக்கள், சுற்றாடல், மற்றும் எதிர்காலம் என்பவற்றின் பாதுகாப்பு கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
முடிவு மற்றும் விதப்புரைகள்
மன்னாரில் கட்டவிழ்ந்து வரும் போராட்டங்கள், மணல் அகழ்வு அல்லது காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் பற்றிய தனித்தனியான பிணக்குகள் அல்ல. இலங்கை எத்தகைய அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கின்றது, மற்றும் யாரைப் பாதிக்கும் வகையில் இது இடம்பெறுகின்றது என்னும் ஆழமான கேள்வியை அவை பிரதிபலிக்கின்றன. பல தசாப்த கால இடப்பெயர்வு மற்றும் யுத்தம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை ஏற்கனவே தாங்கியுள்ள மன்னாரைச் சேர்ந்த சமூகங்களுக்கு, இம்முறை தேசிய முன்னேற்றம் என்னும் பதாகையின் கீழ், உடைமைகள் பறிப்பிற்கான சுழற்சிகளை மீண்டும் உருவாக்குவதற்கு இந்தக் கருத்திட்டங்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றன.
மக்களின் உரிமைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் சுற்றாடல் ஆகியவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்தி அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்பதற்கான ஒரு நினைவூட்டலாக எப்பாவல வழக்கு அமைந்துள்ளது. தற்போதுள்ள மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் உயர் நீதிமன்றத்தின் அங்கீகாரம் இன்று மன்னாருக்கு நேரடியாகப் பொருந்துகின்றது. பாரிய அளவிலான கனியப் பிரித்தெடுப்பு மற்றும் மோசமாக திட்டமிடப்பட்ட வலுசக்திக் கருத்திட்டங்களுக்கு மன்னார் தாரை வார்க்கப்படின்;, அத்தீவு அதன் மக்களின் வாழ்விற்கான நிலையான அடித்தளங்களான நிலம், நீர் மற்றும் சூழலியல் ஆகியவற்றை இழக்க நேரிடலாம்.
மன்னாரைச் சேர்ந்த சமூகங்கள் அபிவிருத்தியை நிராகரிக்குமாறு அல்ல, மாறாக அதனை மீள்வடிவில் சிந்திக்குமாறே கோருகின்றன:
•பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த சம்மதத்தை (FPIC)உறுதிப்படுத்தும் உரிமைகள் அடிப்படையிலான ஓர் அபிவிருத்தி மாதிரி.
•கருத்திட்டங்கள் வாழ்வாதாரங்களை பாதிப்பிற்கு உட்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்தும் என உத்தரவாதமளித்து, உள்நாட்டின் நன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாதிரி.
•மன்னாரின் பலவீனமான நிலப்பரப்பு, உயிர்ப்பல்வகைமை மற்றும் உலகளாவிய சுற்றாடல் முக்கியத்துவம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஒரு சூழலியல்சார் நிலைபெறுதகு மாதிரி.
•சமுதாயங்கள் தேசியக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களாக அல்லாது பங்காளர்களாக உள்ள நியாயமான மற்றும் பங்குபற்றலுடனானஒரு மாதிரி.
விதப்புரைகள்
இந்த யதார்த்தங்களின் அடிப்படையில், பின்வரும் நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன:
பாரிய அளவிலான மணல் அகழ்வினை உடனடியாக நிறுத்துதல்
•உண்மையான சமுதாயப் பங்கேற்புடனான விரிவான சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும்வரை மன்னாரில் கனிய மணல் அகழ்விற்கான அனைத்து அங்கீகாரங்களையும் இடைநிறுத்தல்.
காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களின் மீள் மதிப்பீடு
•சூழலியல்சார் தாக்கம், சமுதாயத்தின் இணக்கம், மற்றும் பயன்களின் ஒப்புரவான பகிர்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி தற்போதைய கருத்திட்டங்களை மீளாய்வு செய்தல்.
•மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி பிரித்தெடுப்பின் போதான அநீதிகளை மீண்டும் இழைக்காதிருப்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையான வழிகாட்டல்களைத் தாபித்தல்.
சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள்
•இலங்கையின் இயற்கை வளங்களின் ஆளுகையில் சுற்றாடல் உரிமைகள், தலைமுறைகளுக்கிடையேயான நீதி, மற்றும் FPIC ஆகியவற்றை உட்பொதிப்பதன் மூலம் எப்பாவல தீர்ப்பின் கோட்பாடுகளை தொழிற்பாட்டிற்குக் கொண்டுவருதல்.
•மன்னார் போன்ற சூழலியல்சார் கூருணர்வு மிக்க பிராந்தியங்களில் கருத்திட்டங்களுக்கான சுயாதீன ஆராய்ச்சி அமைப்புகள் காணப்படுவதை உறுதிப்படுத்தல்.
சமுதாயத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்திப் பதிலீடுகள்
•சமுதாயத்தின் தேவைகளுடன் நேரொத்ததாக அமையும் சிறிய அளவிலான, உள்நாட்டில் முகாமை செய்யப்படும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் தீர்வுகளில் முதலீடு செய்தல்.
•நிலைபேறானவையாகவும் கலாசார ரீதியாக வேரூன்றியவையாகவும் காணப்படும் மீன்பிடி, விவசாயம், மற்றும் சூழலியல்-சுற்றுலாத் துறைகளில் வாழ்வாதாரங்களைப் பலப்படுத்தல்.
பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தல்
•முன்மொழியப்பட்ட கருத்திட்டங்கள் அனைத்தையும் பற்றிய தகவல்களுக்கான அணுகலுக்கு உத்தரவாதமளித்தல்.
•பாதிக்கப்பட்ட அனைத்துச் சமுதாயங்களும், அவசியம் ஏற்படின், நீதிமன்றங்கள், மனித உரிமைகள் அமைப்புகள், மற்றும் சர்வதேசப் பொறிமுறைகள் ஆகியவற்றின் ஊடாக பரிகாரங்களை நாடுவதற்கு இயலச் செய்தல்.
மன்னாரின் கதை ஒரு பிராந்தியத்தைப் பற்றியது மாத்திரமல்ல. அது இலங்கையின் அபிவிருத்தி எதிர்காலத்தில் பயணிக்கும் திசை பற்றியது. உடைமைகள் பறிப்பு மற்றும் சுரண்டல் ஆகிய தவறுகளை இந்நாடு மீண்டும் இழைக்குமா, அல்லது எப்பாவல விடயத்தில் பாடம் கற்று மக்களையும் நிலத்தையும் அத்துடன் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கும் அபிவிருத்தி மாதிரி ஒன்றினை ஏற்றுக்கொள்ளுமா?மன்னாரைச் சேர்ந்த மக்களுக்கு இதற்கான பதில் அவசரமானதாக உள்ளது. அவர்களின் இருப்பு அதனிலேயே தங்கியுள்ளது.