
200 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள போதிலும் பாரபட்சமாக நடத்தப்படும் மலையக மக்கள்
Published
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு இருநூறு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இருந்தபோதிலும் இம் மக்களுக்கான அடையாளம், நில உரிமைகள் போன்ற அடிப்படையான பல உரிமைகள் இன்னும் வழங்கப்படாமல் பாரபட்சமாக நடாத்தப் படுகிறார்கள் என காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் HEO நிறுவன பணிப்பாளருமான K.நிஹால் அஹமட் தெரிவித்தார். மாண்பு மிகு மலையக மக்கள் எனும் கெளரவ கோசத்துடன் கிறிஸ்தவ மன்றம் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான பாதயாத்திரை நிகழ்வினை நடாத்தி வருகின்ற இக்கால கட்டம் பொன்னானது. இதனை ஆதரித்தும், பங்கேற்கும் முகமாக கிழக்குவாள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை தற்காலத்தில் நடாத்தி வருவதாக நிஹால் அஹமட் தெரிவித்தார். அத்துடன் எதிர் வருகின்ற 06ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாதையாத்திரையில் இணைந்து கொள்ள கிழக்கு வாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகள் மதவாச்சி முதல் மிகுந்தலைவரை நடைபெற இருக்கின்ற பாதயாத்திரையில் இணைந்துகொள்ள இருப்பதுடன் அன்று பிற்பகல் ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற விழிப்புணர்வு நிகழ்விலும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தங்களின் கோரிக்கையாக மலையக தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்கின்ற அடையாளமான மலையக தமிழ் மக்கள் என்னும் அடையாளத்தினை வழங்குவதுடன் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு காணி உரிமையும் உறுதிப்படுத்த வேண்டும். அது மாத்திரமில்லாது அவர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொண்டு ஒரு சிறந்த கெளரவமான வாழ்வினை அளிக்க வேண்டும் என்பதில் முஸ்லீம் சமூகமாக நாங்கள் உறுதியாக நிற்கின்றோம். எமது இலங்கை நாட்டின் பிரஜைகளாக இருக்கின்ற ஒவ்வொருவரும் கௌரவமாகவும், அவர்களுடைய அடையாளங்களுடனும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பாரபட்சமின்றி அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை முழுமையாக நேசிக்கும், நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபடும் பிரஜைகள் உருவாகுவர் என்பதனை மிகவும் வலுவாக குறிப்பிடுகின்றோம். எனவும் அண்மையில் அட்டாளைச்சேனையில் நடாத்தப்பட்ட மக்கள் ஒன்றுகூடலில் தெரிவித்தார்.
Image contasy Maatram